Saturday, August 18, 2007

தனித்த தமிழச்சி

மரணங்கள் சகஜமாகிப் போன பூமியில்
போர் உமிழ்ந்த் எச்சங்கள்
தமிழ் பேசிய முண்டங்கள்!
பிராயங்கள் பேதமில்லாமல்,
பாலினங்கள் வித்தியாசமில்லாமல்...
குண்டு வீச்சில் சமத்துவம்!

கூட்டிப் பெருக்கிய குப்பைகளாய்
சேர்த்தெரித்த
பிணக்கும்பல்களின் நாற்றங்களையும் மீறி
என் சுவாசக் குளிகளுக்குள் மூச்சு
உயிரென்ற ஒன்றுக்கான சாட்சியாய்
இயங்க விருப்பமில்லாத ஆயுள் சுமையுடன்
தனியாக விடப்பட்ட அனாதையான நான்,
பார்த்துக் கொண்டிருக்கின்றேன்...
சொந்த மயானமான வீட்டின் பின்வளவில்
என் குடும்பத்தை எரித்த சாம்பல் மேட்டினருகில்,
எனக்கென்று மிச்சமாய் எதுவுமில்லாமல்...

வரையறுத்த வாழ்கை நியதிகளில்
பங்கு கொள்ள நாதியற்ற
நிகழ்தகவுகளான பொழுதுகளோடு
நிரந்தரமான போராட்டங்கள்,
பிரிவுகள், மரணங்கள்
பழகிவிட்ட ஆயுள்..
அதனால்
அழுவதற்கு தோன்றவில்லை.
சடுதியில் மரணம் தின்ற உறவுகளால்
உறைந்து போன இதயம்,
அதிர்ந்து போன உணர்வுகளுடன்...
உயிர் மட்டும் துடிப்புடன் உட்கொண்ட
சராசரி ஈழத்துத் தமிழச்சியாய்
நானும் அகதியாய்...அனாதையாய்...

இன்னும் எத்தனை காலம்
வேதனை விழுங்கும் வாழ்கையை ஜீரணிப்பது?
மண்டையோட்டினுள் வெள்ளைப் பிண்டம்
இரத்தத்தில் இரசாயன மாற்றமுருவாக்க
நரம்புகள் சுட்ட கணத்தாக்கங்களில்
வன்மம் வரிந்து வரிந்து
என்னுள் கிளர்ந்து கொழுந்தான அசுரம்...
ஆங்காரமாய்,
அழுவதற்கு அவமானப்பட்டது சுயம்...!

எதிர்காலமாய் இலக்கற்ற பாதை
எதிரில் இருளில் நீண்டு கிடக்கின்றது..
எங்கே போய் நிற்கும்?
விடை பயணப்பட்டால் மட்டுமே இனி...!

எனக்கான பாதையில்
என் குடும்பம் எரித்த சாம்பல் மேட்டை
அடையாள முதல் மைல் கல்லாக வைக்கிறேன்...
இனி மேல்
எனக்கு பதுங்கு குளிகள் தேவையில்லை...
பாதுகாப்பதற்கு எதுவுமில்லாத போது!
பாய வேண்டிய காரணங்களை
ரணங்களாக சேகரித்துவிட்டேன்..
வாழ்கையின் அடுத்த கட்டம் புனுக்கு எட்டவாய்..

முறிந்து போன கூண்டுக்கம்பிகளை
கடந்து நடக்கலாம் இனி..
மீள வந்தால்...
சரித்திரத்தின் ஒரு அங்கமாவது
என் கையிலிருக்குமே..?
அல்லது
சரித்திரத்தில் ஒரு துளியாகி போவேன்...!!

3 comments:

செல்வா said...

தாங்கொணாத் துன்பங்களை எழுத்தில் பிழிந்து இருக்கின்றீர்கள். திருவருள் நல்லருள் பாலிக்க வேண்டுகிறேன். பல இடங்களில் நெஞ்சைத் தொட்டது உங்கள் வரிகள்!
வெறும் சொற்கள் அல்லவே //சடுதியில் மரணம் தின்ற உறவுகளால்
உறைந்து போன இதயம்//

ஒருசில வேண்டுகோள்: அருள்கூர்ந்து குழி என்று எழுதுங்கள் அது குளி இல்லை (ஒருக்கால் நீங்கள் குளி என்று வேறு பொருளில் எழுதி இருந்தால், எனக்கு எடுத்துக் கூறுங்கள்). முயல்கிறேன் என்பது சரி முயற்சிக்கிறேன் என்பது தவறு (உங்கள் மறுமொழியில் இச்சொலாட்சியைக் கண்டதால் குறிப்பிடுகிறேன். மிகப்பலரும் இதைத் தவறாக எழுதுகிறார்கள். தமிழைப் போற்றுவோம்!)

ஸ்வாதி said...

அன்புடன் நண்பர் செல்வா!
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி!
மன்னிக்கவும் எனது எழுத்துப் பிழைகளுக்கு. தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொள்கின்றேன்.
அன்புடன்
சுவாதி.

முல்லை அமுதன் said...

kavithaiyin payirchi therikirathu,
vaazhthukkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/