Wednesday, August 15, 2007

சீரழிப்பு!

ஓரிரவு அந்த ஊரில் இராணுவ முற்றுக்கை நிகழ்ந்தது. சோதனையிடல் என்ற பெயரில் தன்னிஷ்டத்துக்கு காட்டுமிராண்டிகளாக ந்த ஊரின் ஒவ்வொரு வீடுகளையும் நாசம் செய்கின்றது இராணுவம். சிறுவர் வயோதிபர் என்ற பேதமில்லாமல் கொல்கின்றனர். பெண்களின் கற்பை சூறையாடுகின்றனர். தலைவியும் அவர்களிடம் நாசமாகிப் போனாள்... இரண்டு நாட்களின் பின் எல்லாம் ஓய்ந்த பின் தோழி தலைவியைச் சந்திக்கின்றாள்...


தோழி கூற்று:

நட்ட நடு ஜாமத்தில் சகியே - நேற்றிரவு
பச்சைத் தொப்பிப் பேய்களடி
வெட்டிப் போட்டதடி யெம் அயலை
முன் உச்சியில் குண்டு குத்தி துளைத்தரடி.
பச்சைப் பசும் பாலகரொடு - பல
அப்பாவிகளை அப்பிப் போனரடி
வெட்ட வெளியாக்கினரடி - இங்கு
வயல் வெளியும் சுடுகாடானதடி
மிச்சமாயென்னடி யிருக்கிங்கு - பச்சைப்
பசுங்கிளியே பாராமுகமேனடி யேனிங்குனக்கு?

(தலைவி கண்ணீர் விடுகிறாள்)

அற்புதங்கள் நிகழ்த்திய ஜாதியடி நாம்-ஓர்
அற்பனின் வெறியாட்டத்தில் அழலாமோ
சொப்பனமாய் நினைத்துவிடு -நம் சுதந்திர
வீரர் செப்பனிட்டே வருவர் ஓரிரு நாளில்
கற்பனையில் கனவு காணுதடி - காட்டுமிராண்டி
எம் கரிசலில் கை வைத்துவிட்டோமென்று
வித்தகம் நடக்கப் போகுதடி பார்
விக்கித் த்விக்கப் போனாரடி- எம்கையில்
சத்தியமாய் தானடி தோழி - எம்
சாதனையாளன் சாவடிப்பான் போரில்.

(அப்போதும் தலைவி கண்ணீர் உகுக்கிறாள். தோழி புரியாமல் வெறுத்துப் போகிறாள்)

இத்தனை கூறியும் மட மானே - ஏன்
இப்படிக் கண்ணீரடி வீணே
எத்தனையோ இழந்தவர்கள் தானே- நாம்
இன்றென்ன புதுமை பெண்ணே?
செத்த வீடுகள் சகசமடி கண்ணே-எமக்கு
சேர்ந்தவர்களுமிங்கில்லை பின்னே
கொத்துக்களாய் கண்ணீரேன் உகுத்தாய்?
காரணம் சொல் ஏன்னுருகுகின்றாய்?

தலைவி கூற்று:

எத்தனை தந்தாலுமினியென்ன - சகியே
யானினி செத்த பிணத்துக்கீடானேன்.
மெத்த வெறியுடனே நேற்றிரவு - ஓநாய்கள்
என் மேனி மேய்ந்தனரசி என் விதியே!
பத்திரமாய் வைத்திருந்தேன் சகியே!
என் பாங்கனுக்க ர்ப்பணிக்க எனையே
சித்திரம் கலைத்தாரடி பாங்கி - இனி
என் சீவனேதுக்கடி சிந்தி!

(தோழி அதிர்ந்து போகிறாள்)

தலைவி தொடர்ந்து அரற்றுகிறாள்:

ஐயோ வென் ஆவி துடிக்குதடி தோழி
இனி யாருக்காய் என் ஆயுள் நாழி?
பொய்யாய் சொப்பனாமாயிராதோ-என்
பொக்கிஷம் பத்திரமாய் வராதோ?
என்ன செய்வேனடி தோழி- என்
உயிர் எப்படி தரிபேனடி பாவி
அன்பன் வரும்போது இவ்விடம்
அர்ப்பணிக்க ஏதுமில்லை என்னிடம்

தோழி கூற்று:

'ஆ' வெம் முயிர் பதைக்குதே - ஆறுதல்
பகர அகரங்களில்லையே
'சே' என்ன மிருகங்களிவர்கள்? - பெற்றார்
சேர்க்கையில் தவறியவர்கள்.
'மா' விருட்சம் பெயர்க்கவியலாமல் -இந்த
மாங்கனிகளை சிதைத் தெறிந்தனரோ?
'பே' யினத்திலுமீனம் - இவர்
பிறப்பினில் தானெங்கோ ஊனம்

தலைவி புலம்பல்:

எத்தனை நாளினி பார்த்திருப்பேன் - இனி
எங்ஙனம் உயிர் தரித்திருப்பேன்?
சத்தியமாயினி என்னுயிர் சாளரங்கள் மூடும் - என்
சாதலின் துயிலில் உயிர் காதலும் மாளும்
பத்திரமாய் உயிர் பூட்டி வைத்தேன் - அவன்
பாதங்களில் அர்ப்பணிக்கவென்றெண்ணி
எத்தர்கள் குதறி யுமிழ்ந்தா - இந்த
எச்சமினி யேனடி அழுந்த?

விடியுமென்று நினைத்திருந்தேன் - விதியை
முடியென்றது மிருகக் கூட்டம்
இடியும் வீழ்ந்ததென் வாழ்வில் - மதி
முழுதும் மயங்கி மருகில்
இனியுமென்ன உண்டு சகியே - வெறி
நரிகள் எச்சில் பிரட்டி துப்பிய மீதி
கனியும் மலராயிருந்தேன் - பாவிகள்
சருகாய் மிதித்தேகினரே

மிருகங்கள் பாய்ந்தங்கு பிராண்டி
என் மேனி மேய்ந்ததடி வீணே
திருவின் ஒளி இருட்டி தோய்த்து
துயரூட்டி சென்றதடி பாழே
கருவின் உயிர்காக்குங் கருவூலமழித்து
எனை தெருவில் போட்டதடி மீளேன்
உருவில் உள்ளதெல்லாம் அழித்து
ஒன்றுமிலாமலானதடி எனக்கு வாழ்வே

பத்தினியாயிருந்தேன் இத்தனை நாள் - பாவியர்
என் பத்திரத்தை சிதைதழித்தனர் நொடியில்
எத்தனை வலி பொறுத்திருந்தேன் வாழ்வில்
இனி எங்ஙனம் உயிர் தரித்திருப்பேன் வீணில்
கொத்தடிமையாய் பெண்ணினமானதோவிங்கு?
"கற்பு " சொற்ப விலையிலுமீனமானதோ
பகைவரரண் பாயும் புலி பத்தினி விதியே
சொறபமெனில் மற்றவர் விதியாதோடி?

புத்தகமாய் காத்திருந்தேன் - என்
பக்கங்கள் கிழிந்து போனதடி
எத்தர்கள் கையில் விழுந்தேன் - இன்று
எச்சிலிலை யானேனடி
பத்தரை மாற்றுத் தங்கம் - ஓரிரவில்
பித்தளையாய் போனதடி
அத்தனையும் நடந்தும் - இனியென்ன
அக்கிரமத்தால் உயிர் தரித்தேனடி?

தோழி கூற்று (அதிர்சியுடன்):

என்ன சொன்னாயடி தோழி? - ஏன்
என்னிரு செவிகளிலுமிந்தா ஈழி?
பொன்னே உன் திருவாயில் ஏனிப்படி
ஈயம் வாரியிறைதாயடி பாவி?
என்னே இவர்கள் தரும் அநியாயம்?-ஈங்
கிதற்கில்லையோர் நியாயம்?
என்ன செருக்கழிப்பதாய் நினைந்து
உன்னை உருக்குலைத்தனரோ சினந்து?

புத்தகம் நிரப்பிய புதுக் கவிதை - அதில்
ஓர் பக்கம் கிழிந்ததில் புலம்பலாமோ?
(பின்னட்டை கிழிந்ததில் புலம்பலாமோ?)
எத்தனை வித்தகர் இன் மண்ணில்- அவர்
இன்னொர் தரமுன்னி உயர்த்தி வைஇப்பர்.
கற்பென்றொன்றுண்டு என் கண்ணே! - அது
அற்ப சிறு நீரகா வாயிலில்லை
சிற்றறிவாய் நீ சிதையாதே - வீணாய்
சேதமுற்றோமென்று பதறாதே?

சற்றுத் தள்ளியே பதுங்கு குளிகள் - பல
பச்சைப் பசுந்தளிர்கள் பசியில்
பற்றை கற்றாளை காடுகள் - புதர் முட்கள்
குற்றிய புண் தேகங்களொடு புலிகள்
கீறல் கொத்திப் பிரித்த தோல் வெடிப்பில்
குருதி கொட்டிச் சிவந்த நாற்றம்
வலியொடு சீழும் வழியும் - சமயத்தில்
ரணமும் விஷமேறும் சகசம்

அதை ஒற்றி உவமையொடு பெண்ணே
உன் இழப்பும் அது போலொன்றே
காமப் பசியால் நாய்கள் எச்சில - வீணாய்
பட்டதால் வெறுப்பா ? - கொதி
நீரில் கழுவி விடு பெண்ணே - உன்
கற்பு கரைந்திடாத மலைக் குன்றே.
விழி நீரில் விளைவேதுமில்லை கண்ணே
விதி மாற்றியெழுத வீறொடு எழு செண்டே!

2 comments:

Unknown said...

இக்கவிதையை அத்தனை கோடி தமிழர்களும் நிச்சயம் படித்துணர செய்வது அவசியம்..
இதோ சமர்ப்பிக்கிறேன் என் விழிகளின் திரவ எழுத்துக்களை உப்போடு உஷ்ணத்தையும் சேர்த்து....

ஸ்வாதி said...

நன்றி சண் ஷிவா!