Saturday, August 18, 2007

தனித்த தமிழச்சி

மரணங்கள் சகஜமாகிப் போன பூமியில்
போர் உமிழ்ந்த் எச்சங்கள்
தமிழ் பேசிய முண்டங்கள்!
பிராயங்கள் பேதமில்லாமல்,
பாலினங்கள் வித்தியாசமில்லாமல்...
குண்டு வீச்சில் சமத்துவம்!

கூட்டிப் பெருக்கிய குப்பைகளாய்
சேர்த்தெரித்த
பிணக்கும்பல்களின் நாற்றங்களையும் மீறி
என் சுவாசக் குளிகளுக்குள் மூச்சு
உயிரென்ற ஒன்றுக்கான சாட்சியாய்
இயங்க விருப்பமில்லாத ஆயுள் சுமையுடன்
தனியாக விடப்பட்ட அனாதையான நான்,
பார்த்துக் கொண்டிருக்கின்றேன்...
சொந்த மயானமான வீட்டின் பின்வளவில்
என் குடும்பத்தை எரித்த சாம்பல் மேட்டினருகில்,
எனக்கென்று மிச்சமாய் எதுவுமில்லாமல்...

வரையறுத்த வாழ்கை நியதிகளில்
பங்கு கொள்ள நாதியற்ற
நிகழ்தகவுகளான பொழுதுகளோடு
நிரந்தரமான போராட்டங்கள்,
பிரிவுகள், மரணங்கள்
பழகிவிட்ட ஆயுள்..
அதனால்
அழுவதற்கு தோன்றவில்லை.
சடுதியில் மரணம் தின்ற உறவுகளால்
உறைந்து போன இதயம்,
அதிர்ந்து போன உணர்வுகளுடன்...
உயிர் மட்டும் துடிப்புடன் உட்கொண்ட
சராசரி ஈழத்துத் தமிழச்சியாய்
நானும் அகதியாய்...அனாதையாய்...

இன்னும் எத்தனை காலம்
வேதனை விழுங்கும் வாழ்கையை ஜீரணிப்பது?
மண்டையோட்டினுள் வெள்ளைப் பிண்டம்
இரத்தத்தில் இரசாயன மாற்றமுருவாக்க
நரம்புகள் சுட்ட கணத்தாக்கங்களில்
வன்மம் வரிந்து வரிந்து
என்னுள் கிளர்ந்து கொழுந்தான அசுரம்...
ஆங்காரமாய்,
அழுவதற்கு அவமானப்பட்டது சுயம்...!

எதிர்காலமாய் இலக்கற்ற பாதை
எதிரில் இருளில் நீண்டு கிடக்கின்றது..
எங்கே போய் நிற்கும்?
விடை பயணப்பட்டால் மட்டுமே இனி...!

எனக்கான பாதையில்
என் குடும்பம் எரித்த சாம்பல் மேட்டை
அடையாள முதல் மைல் கல்லாக வைக்கிறேன்...
இனி மேல்
எனக்கு பதுங்கு குளிகள் தேவையில்லை...
பாதுகாப்பதற்கு எதுவுமில்லாத போது!
பாய வேண்டிய காரணங்களை
ரணங்களாக சேகரித்துவிட்டேன்..
வாழ்கையின் அடுத்த கட்டம் புனுக்கு எட்டவாய்..

முறிந்து போன கூண்டுக்கம்பிகளை
கடந்து நடக்கலாம் இனி..
மீள வந்தால்...
சரித்திரத்தின் ஒரு அங்கமாவது
என் கையிலிருக்குமே..?
அல்லது
சரித்திரத்தில் ஒரு துளியாகி போவேன்...!!

Wednesday, August 15, 2007

சீரழிப்பு!

ஓரிரவு அந்த ஊரில் இராணுவ முற்றுக்கை நிகழ்ந்தது. சோதனையிடல் என்ற பெயரில் தன்னிஷ்டத்துக்கு காட்டுமிராண்டிகளாக ந்த ஊரின் ஒவ்வொரு வீடுகளையும் நாசம் செய்கின்றது இராணுவம். சிறுவர் வயோதிபர் என்ற பேதமில்லாமல் கொல்கின்றனர். பெண்களின் கற்பை சூறையாடுகின்றனர். தலைவியும் அவர்களிடம் நாசமாகிப் போனாள்... இரண்டு நாட்களின் பின் எல்லாம் ஓய்ந்த பின் தோழி தலைவியைச் சந்திக்கின்றாள்...


தோழி கூற்று:

நட்ட நடு ஜாமத்தில் சகியே - நேற்றிரவு
பச்சைத் தொப்பிப் பேய்களடி
வெட்டிப் போட்டதடி யெம் அயலை
முன் உச்சியில் குண்டு குத்தி துளைத்தரடி.
பச்சைப் பசும் பாலகரொடு - பல
அப்பாவிகளை அப்பிப் போனரடி
வெட்ட வெளியாக்கினரடி - இங்கு
வயல் வெளியும் சுடுகாடானதடி
மிச்சமாயென்னடி யிருக்கிங்கு - பச்சைப்
பசுங்கிளியே பாராமுகமேனடி யேனிங்குனக்கு?

(தலைவி கண்ணீர் விடுகிறாள்)

அற்புதங்கள் நிகழ்த்திய ஜாதியடி நாம்-ஓர்
அற்பனின் வெறியாட்டத்தில் அழலாமோ
சொப்பனமாய் நினைத்துவிடு -நம் சுதந்திர
வீரர் செப்பனிட்டே வருவர் ஓரிரு நாளில்
கற்பனையில் கனவு காணுதடி - காட்டுமிராண்டி
எம் கரிசலில் கை வைத்துவிட்டோமென்று
வித்தகம் நடக்கப் போகுதடி பார்
விக்கித் த்விக்கப் போனாரடி- எம்கையில்
சத்தியமாய் தானடி தோழி - எம்
சாதனையாளன் சாவடிப்பான் போரில்.

(அப்போதும் தலைவி கண்ணீர் உகுக்கிறாள். தோழி புரியாமல் வெறுத்துப் போகிறாள்)

இத்தனை கூறியும் மட மானே - ஏன்
இப்படிக் கண்ணீரடி வீணே
எத்தனையோ இழந்தவர்கள் தானே- நாம்
இன்றென்ன புதுமை பெண்ணே?
செத்த வீடுகள் சகசமடி கண்ணே-எமக்கு
சேர்ந்தவர்களுமிங்கில்லை பின்னே
கொத்துக்களாய் கண்ணீரேன் உகுத்தாய்?
காரணம் சொல் ஏன்னுருகுகின்றாய்?

தலைவி கூற்று:

எத்தனை தந்தாலுமினியென்ன - சகியே
யானினி செத்த பிணத்துக்கீடானேன்.
மெத்த வெறியுடனே நேற்றிரவு - ஓநாய்கள்
என் மேனி மேய்ந்தனரசி என் விதியே!
பத்திரமாய் வைத்திருந்தேன் சகியே!
என் பாங்கனுக்க ர்ப்பணிக்க எனையே
சித்திரம் கலைத்தாரடி பாங்கி - இனி
என் சீவனேதுக்கடி சிந்தி!

(தோழி அதிர்ந்து போகிறாள்)

தலைவி தொடர்ந்து அரற்றுகிறாள்:

ஐயோ வென் ஆவி துடிக்குதடி தோழி
இனி யாருக்காய் என் ஆயுள் நாழி?
பொய்யாய் சொப்பனாமாயிராதோ-என்
பொக்கிஷம் பத்திரமாய் வராதோ?
என்ன செய்வேனடி தோழி- என்
உயிர் எப்படி தரிபேனடி பாவி
அன்பன் வரும்போது இவ்விடம்
அர்ப்பணிக்க ஏதுமில்லை என்னிடம்

தோழி கூற்று:

'ஆ' வெம் முயிர் பதைக்குதே - ஆறுதல்
பகர அகரங்களில்லையே
'சே' என்ன மிருகங்களிவர்கள்? - பெற்றார்
சேர்க்கையில் தவறியவர்கள்.
'மா' விருட்சம் பெயர்க்கவியலாமல் -இந்த
மாங்கனிகளை சிதைத் தெறிந்தனரோ?
'பே' யினத்திலுமீனம் - இவர்
பிறப்பினில் தானெங்கோ ஊனம்

தலைவி புலம்பல்:

எத்தனை நாளினி பார்த்திருப்பேன் - இனி
எங்ஙனம் உயிர் தரித்திருப்பேன்?
சத்தியமாயினி என்னுயிர் சாளரங்கள் மூடும் - என்
சாதலின் துயிலில் உயிர் காதலும் மாளும்
பத்திரமாய் உயிர் பூட்டி வைத்தேன் - அவன்
பாதங்களில் அர்ப்பணிக்கவென்றெண்ணி
எத்தர்கள் குதறி யுமிழ்ந்தா - இந்த
எச்சமினி யேனடி அழுந்த?

விடியுமென்று நினைத்திருந்தேன் - விதியை
முடியென்றது மிருகக் கூட்டம்
இடியும் வீழ்ந்ததென் வாழ்வில் - மதி
முழுதும் மயங்கி மருகில்
இனியுமென்ன உண்டு சகியே - வெறி
நரிகள் எச்சில் பிரட்டி துப்பிய மீதி
கனியும் மலராயிருந்தேன் - பாவிகள்
சருகாய் மிதித்தேகினரே

மிருகங்கள் பாய்ந்தங்கு பிராண்டி
என் மேனி மேய்ந்ததடி வீணே
திருவின் ஒளி இருட்டி தோய்த்து
துயரூட்டி சென்றதடி பாழே
கருவின் உயிர்காக்குங் கருவூலமழித்து
எனை தெருவில் போட்டதடி மீளேன்
உருவில் உள்ளதெல்லாம் அழித்து
ஒன்றுமிலாமலானதடி எனக்கு வாழ்வே

பத்தினியாயிருந்தேன் இத்தனை நாள் - பாவியர்
என் பத்திரத்தை சிதைதழித்தனர் நொடியில்
எத்தனை வலி பொறுத்திருந்தேன் வாழ்வில்
இனி எங்ஙனம் உயிர் தரித்திருப்பேன் வீணில்
கொத்தடிமையாய் பெண்ணினமானதோவிங்கு?
"கற்பு " சொற்ப விலையிலுமீனமானதோ
பகைவரரண் பாயும் புலி பத்தினி விதியே
சொறபமெனில் மற்றவர் விதியாதோடி?

புத்தகமாய் காத்திருந்தேன் - என்
பக்கங்கள் கிழிந்து போனதடி
எத்தர்கள் கையில் விழுந்தேன் - இன்று
எச்சிலிலை யானேனடி
பத்தரை மாற்றுத் தங்கம் - ஓரிரவில்
பித்தளையாய் போனதடி
அத்தனையும் நடந்தும் - இனியென்ன
அக்கிரமத்தால் உயிர் தரித்தேனடி?

தோழி கூற்று (அதிர்சியுடன்):

என்ன சொன்னாயடி தோழி? - ஏன்
என்னிரு செவிகளிலுமிந்தா ஈழி?
பொன்னே உன் திருவாயில் ஏனிப்படி
ஈயம் வாரியிறைதாயடி பாவி?
என்னே இவர்கள் தரும் அநியாயம்?-ஈங்
கிதற்கில்லையோர் நியாயம்?
என்ன செருக்கழிப்பதாய் நினைந்து
உன்னை உருக்குலைத்தனரோ சினந்து?

புத்தகம் நிரப்பிய புதுக் கவிதை - அதில்
ஓர் பக்கம் கிழிந்ததில் புலம்பலாமோ?
(பின்னட்டை கிழிந்ததில் புலம்பலாமோ?)
எத்தனை வித்தகர் இன் மண்ணில்- அவர்
இன்னொர் தரமுன்னி உயர்த்தி வைஇப்பர்.
கற்பென்றொன்றுண்டு என் கண்ணே! - அது
அற்ப சிறு நீரகா வாயிலில்லை
சிற்றறிவாய் நீ சிதையாதே - வீணாய்
சேதமுற்றோமென்று பதறாதே?

சற்றுத் தள்ளியே பதுங்கு குளிகள் - பல
பச்சைப் பசுந்தளிர்கள் பசியில்
பற்றை கற்றாளை காடுகள் - புதர் முட்கள்
குற்றிய புண் தேகங்களொடு புலிகள்
கீறல் கொத்திப் பிரித்த தோல் வெடிப்பில்
குருதி கொட்டிச் சிவந்த நாற்றம்
வலியொடு சீழும் வழியும் - சமயத்தில்
ரணமும் விஷமேறும் சகசம்

அதை ஒற்றி உவமையொடு பெண்ணே
உன் இழப்பும் அது போலொன்றே
காமப் பசியால் நாய்கள் எச்சில - வீணாய்
பட்டதால் வெறுப்பா ? - கொதி
நீரில் கழுவி விடு பெண்ணே - உன்
கற்பு கரைந்திடாத மலைக் குன்றே.
விழி நீரில் விளைவேதுமில்லை கண்ணே
விதி மாற்றியெழுத வீறொடு எழு செண்டே!

தலைவியின் பிரிவாற்றாமை.

வேதனை மிகுந்ததடி தோழி - வேங்கை
மடி தேடி மனமோடி விழி நீரோடி
சோதனைக் காலமடி தோழி - துயர்
சூழ் கொள்ளும் இதயம் வாடி
சாதனைகள் பல தானடி தோழி - எனைச்
சாய்த்துவிட்டதுமொரு வகையில் போடி
கோதையெனை யணைக்க தோழி - உன்
கொண்ணன் வருவானோடி யோடி?

எத்தனை இரவுக ளின்னும் - இங்கு
மெத்தையில் தீ பொறுத்திருப்பேன்
மெத்தனமான தேனடி யென் எண்ணம் - காதல்
வித்தை வினையானதே னிங்கின்னும்
உத்தமன் தானடி யெனினும் - என்
னுயிர் கருகுவது கண்டிலந்
இத்தனை துயர் தான் காதலெனில் - ஈங்
கெனக் கீதேனடி தோழி?

தோழி கூற்று:

வேதனை தகர்த்துவிடு தோழி - வீரனை
வரித்த மனதுனது வாழி!
பாதகர் சூx எல்லையதில் - அவன்
பாதுகாவலனடி பலரோடு!
பேதமை துற நெஞ்சே - சகி நீ
பெருமையுற வேறென வேணும் இஞ்சை?
காதலருமை தானடி கண்மணியே - ஆயினும்
கரிசல் உயிருனுமேலடி பொன்மணியே!

தலைவி கூற்று:

செத்து மடிந்தார் பலரென் னுறவில் - என்
சேமிப்பின் எச்சம் இவன் மட்டும் நெஞ்சில்
சொத்தென்றி வன் மட்டும் கொண்டேன்
போர் சேவைக்குள் புகுந்து கொண்டான்
வித்தகமறியாதது என்னறிவு - வீர
விளையாட்டிலெனை மறந்ததென் உறவு
கொத்தடிமையான தென் தேசம் - மீட்டுக்
கொண்டு வருவானோடி யென் நேசன்?

தோழி கூற்று:

வீதிகள் சமைத்து வைத்தோமடி - எம்
வேதகம் சூழ் தேசம் செழிக்க
விதிகள்போட்ட அன்னியம் பாரடி - எமை
வேலிக்குள் முடக்க நினைக்குதந்த சன்னியம்
புத்டி முடக்கி வாய் பொத்தியிருப்போமோடி - நாம்
புலிகளா இல்லை பகடைகளா
சாதிக்கும் சாதிகளுடன் உன் சகாயன் - சடுதியில்
சாதித்து வருவானடி தமிழீழம்!

Monday, March 12, 2007

புதியகலித் தொகை பாகம் 2

தலைவி கூற்று

வயது வருடங்களை விழுங்கி
உருவத்தில்
தோல் சுருங்கி...
நரம்புகள் வெளித்தெறித்த
நான்.
முதிர் கன்னி...!
காத்திருத்தலில்
என் சுவாசம் கழித்து
சோர்வுகள் கோப்புகளாக்கி
மனம் சுமை தாங்கி..
மீதமெத்தனை நாட்களடி..?

தோழி கூற்று.

பார்...
பாசறைகள் கட்டிய தேசம்;
பாசங்களை
மனச் சிறையில் வத்த
வீரம்;
தேசத்தின் எல்லைக் கோட்டில்
உன் நேசத்துக்குரியவன்....!

விடிகாலைகள் பல..
வீணாகப் புலர்ந்தாலும்...
உன் வாழ்நாளில் கூட
ஒரு வரலாறு வரும்...;
தேனாய்
உன் கொப்புலனில்
சேதி தரும்...!

சாராய்...
இரு மலைச் சாரலில்
நீர் தூறாய்..
மாறாய் ..மருகியிரு..
உன் மாறன்..மறவனாய்
வரும் நாள்
பாராய்..!

காதலி கூற்று! (காதலனுக்கு)

கனவுகள் பதுக்கி வத்த
இதயம்
இப்போதெல்லாம் மூச்சிரைக்கிறது;
காலம்
என் வயதையும் கூடவே
விழுங்குகிறது;
இரவுகளில்
இங்கே நான்
என் இளமையை
மெழுகு வர்த்திகளோடு
எரிந்து கரைக்க ...
விடியல்களில்
சில நாளில் மட்டும்
உன் வீரத்தின் வரலாறு
படிக்கின்றேன்.

எல்லையின்
நீ
எதிரிகளோடு முனைப்பாய்
போரில்...
நானும் இங்கு யுத்தம் தான்
புரிகிறேன்
என் விரக பேயுடன்..
தேசத்தின் எல்லைக் கோட்டுக்கு
நீ காவலாய்;
உன் தேகம் பட வேண்டி
என் சுவாசத்துக்கு மட்டுமே
நான் காவலாய்...!

பெருமைப்படுகிறேன்,
உன் வீரத்தின் விளைவுகளை
வீதிகளில்
பலர் உரைக்கும் போது;

பொறாமைப்படுகிறேன்
உன் எதிரிகள் மீது
உன் கையால் மோட்ச்சம்
அடைகிறார்களேயென்று;
அப்படியாவது
ஒரு விமோசனம்
எனக்கு எழுதப்படவில்லையே...!

விரகத்தை என்னிடம் விட்டுவிட்டு
வீரத்தை மட்டும்
நீ
கொள்வனவு செய்தது
என்ன நியாயம்?

பஞ்சணையில் படுப்பதால் தான்
உன் கனவு வருகிறது
என்றிருந்தேன்
தவறு!
பதுங்கு குளிகளில் பரிதவித்த போதும்
உன் நினைவு
பரவசப்படுத்துகிறது!

கல்யாணம் வரை
கன்னித் தன்மை காப்பது
தவறு காதலா!
காடையனின் கையில்
என் கற்பழிவதை விட
உன் கள்ளக் காதலில்
ஒரு பிள்ளையாவது பெற்றீருக்கலாம்,
முன்னேற்பாடாய்..
ஒரு மாவீரன் தயாரிக்க...!

நீ வீரன்!
மரணம்
உனக்கு ஒரு முறை தான்!
நான்
வீரனின் காதலி!
உன் ஒவ்வொரு
போர் முற்றுகையும்
எனக்கு மரணவலி!

ஒரு வேளை
உன் மரணம் உன்னை மாவீரனாய்
கல்லறைக் கோவிலில்
இரண்டாம் ஆண்டவனாய்
இருத்தும்!
அப்போது
நான் விதவையா? வாழாவெட்டியா?

என்னுடலில்
பௌதீகம் தவிர்ந்த சகலமும்
உன் நினைவால்
கன்னிமை பொசுங்க
காதல் களங்கம்..!

சுதந்திர தீபத்துக்கு
நீ உன்னை
எண்ணெயாய் ஊற்றினாய்;
ஆனால்
திரியாய்
எரிந்து சாம்பராஅய் ...கருகி..
நான்
மேனியில் கனல் மொய்த்து...!

உன்னை
அணைப்பவை எவற்றையும்
வெறுக்கிறேன்,
உன் மரணம் உட்பட...
உன்னோடெனை
இணைக்கும் எதனையும்
நேசிக்கிறேன்
உன்னோடான
என் மரணம் உட்பட...!

என் விருப்பங்கள்
உன் விண்ணப்பப் ப்டவத்தில்
நிரப்பவியலாதவை!

என் கனவுகளை
நான் தொலைத்தது
நீ
முதன் முறையாய்
பாசறையில் காவலுக்காய்
கண் விழித்த போது!

என்னுடலில் உதிரம்
ஒரு வீசை குறைந்தது
முதல் சமரில்
நீ
காயம் பட்ட போது...!

என் வாழ்கையில்
நான் முதன் முதலில்
உபவாசம் அனுஷ்டித்தது
நீ
உன் பசி மறந்த போது!

என் மனதுக்குள்
நீ
விதைத்த விதை
நீயாகவே
வேரூன்றி...
..வெட்டி வீழ்த்த
இனி
நீ வந்தாலும் இயலாது..!


மாவீரன் பதில்

கடும் குளிரில்
இந்தக் காவலரண்களில்...
நான்..!
கண்மணியே...!
கனரகம் சுமந்து
இந்தக் கைகள்
களைக்கவில்லையடி..!
உன் கனவுகள் சுமந்த
ந்ன் இதயம்
கனக்கிறதடி!
விடியல்கள் எண்ணுகின்றேன்,
வீணர்களைக் காவு வாங்கி;
செய்திகள் அனுப்புகின்றேன்,
தூதுகள் வந்ததா உன்னிடம்...?

கணங்களில்
உன் காதல் கூட
என்னைக் கோழையாக்குகிறது!
ஆனால்..
ஈழமாதவின் கண்ணீர்
இங்கே திரும்பவும்
என்னை இரும்பாக்குகிறது!
சுவாசத்தைப் பங்கிட்டேன்
தேசத்துக்கும் .., உனக்குமாய்...
எனக்கென்று
சேதாரமாய் எதுவுமில்லை..
இந்தக்
குப்பியைத் தவிர...!

(வேறு)

வெற்று வேட்டுக்கள் - எங்கள் வேலிகளில்
போட்டன நூறு ஓட்டைகள்
சுட்டுப் பொசுங்கிய பிண நாற்றங்கள்
வலி குத்தி முடக்கிய உயிர்க் கூடுகள்
பட்டுத் தெறித்துச் சிதறிய செல் துண்டுகள்
வெட்டிப் போட்ட உடல் முண்டங்கள்
கற்றுத் தந்தது வெறும் பாடமல்ல
விற்று விலை பேசவும் யாம் வீணரல்ல
சற்றுப் பொறுத்திரு சந்திரமதி- நாம்
சந்திக்கும் போதிங்கு மாறியிருக்கும் ஈழவிதி!
எழுதப்பட்ட திகதி: மார்கழி , 5, 2001.