Monday, March 12, 2007

புதியகலித் தொகை பாகம் 2

தலைவி கூற்று

வயது வருடங்களை விழுங்கி
உருவத்தில்
தோல் சுருங்கி...
நரம்புகள் வெளித்தெறித்த
நான்.
முதிர் கன்னி...!
காத்திருத்தலில்
என் சுவாசம் கழித்து
சோர்வுகள் கோப்புகளாக்கி
மனம் சுமை தாங்கி..
மீதமெத்தனை நாட்களடி..?

தோழி கூற்று.

பார்...
பாசறைகள் கட்டிய தேசம்;
பாசங்களை
மனச் சிறையில் வத்த
வீரம்;
தேசத்தின் எல்லைக் கோட்டில்
உன் நேசத்துக்குரியவன்....!

விடிகாலைகள் பல..
வீணாகப் புலர்ந்தாலும்...
உன் வாழ்நாளில் கூட
ஒரு வரலாறு வரும்...;
தேனாய்
உன் கொப்புலனில்
சேதி தரும்...!

சாராய்...
இரு மலைச் சாரலில்
நீர் தூறாய்..
மாறாய் ..மருகியிரு..
உன் மாறன்..மறவனாய்
வரும் நாள்
பாராய்..!

காதலி கூற்று! (காதலனுக்கு)

கனவுகள் பதுக்கி வத்த
இதயம்
இப்போதெல்லாம் மூச்சிரைக்கிறது;
காலம்
என் வயதையும் கூடவே
விழுங்குகிறது;
இரவுகளில்
இங்கே நான்
என் இளமையை
மெழுகு வர்த்திகளோடு
எரிந்து கரைக்க ...
விடியல்களில்
சில நாளில் மட்டும்
உன் வீரத்தின் வரலாறு
படிக்கின்றேன்.

எல்லையின்
நீ
எதிரிகளோடு முனைப்பாய்
போரில்...
நானும் இங்கு யுத்தம் தான்
புரிகிறேன்
என் விரக பேயுடன்..
தேசத்தின் எல்லைக் கோட்டுக்கு
நீ காவலாய்;
உன் தேகம் பட வேண்டி
என் சுவாசத்துக்கு மட்டுமே
நான் காவலாய்...!

பெருமைப்படுகிறேன்,
உன் வீரத்தின் விளைவுகளை
வீதிகளில்
பலர் உரைக்கும் போது;

பொறாமைப்படுகிறேன்
உன் எதிரிகள் மீது
உன் கையால் மோட்ச்சம்
அடைகிறார்களேயென்று;
அப்படியாவது
ஒரு விமோசனம்
எனக்கு எழுதப்படவில்லையே...!

விரகத்தை என்னிடம் விட்டுவிட்டு
வீரத்தை மட்டும்
நீ
கொள்வனவு செய்தது
என்ன நியாயம்?

பஞ்சணையில் படுப்பதால் தான்
உன் கனவு வருகிறது
என்றிருந்தேன்
தவறு!
பதுங்கு குளிகளில் பரிதவித்த போதும்
உன் நினைவு
பரவசப்படுத்துகிறது!

கல்யாணம் வரை
கன்னித் தன்மை காப்பது
தவறு காதலா!
காடையனின் கையில்
என் கற்பழிவதை விட
உன் கள்ளக் காதலில்
ஒரு பிள்ளையாவது பெற்றீருக்கலாம்,
முன்னேற்பாடாய்..
ஒரு மாவீரன் தயாரிக்க...!

நீ வீரன்!
மரணம்
உனக்கு ஒரு முறை தான்!
நான்
வீரனின் காதலி!
உன் ஒவ்வொரு
போர் முற்றுகையும்
எனக்கு மரணவலி!

ஒரு வேளை
உன் மரணம் உன்னை மாவீரனாய்
கல்லறைக் கோவிலில்
இரண்டாம் ஆண்டவனாய்
இருத்தும்!
அப்போது
நான் விதவையா? வாழாவெட்டியா?

என்னுடலில்
பௌதீகம் தவிர்ந்த சகலமும்
உன் நினைவால்
கன்னிமை பொசுங்க
காதல் களங்கம்..!

சுதந்திர தீபத்துக்கு
நீ உன்னை
எண்ணெயாய் ஊற்றினாய்;
ஆனால்
திரியாய்
எரிந்து சாம்பராஅய் ...கருகி..
நான்
மேனியில் கனல் மொய்த்து...!

உன்னை
அணைப்பவை எவற்றையும்
வெறுக்கிறேன்,
உன் மரணம் உட்பட...
உன்னோடெனை
இணைக்கும் எதனையும்
நேசிக்கிறேன்
உன்னோடான
என் மரணம் உட்பட...!

என் விருப்பங்கள்
உன் விண்ணப்பப் ப்டவத்தில்
நிரப்பவியலாதவை!

என் கனவுகளை
நான் தொலைத்தது
நீ
முதன் முறையாய்
பாசறையில் காவலுக்காய்
கண் விழித்த போது!

என்னுடலில் உதிரம்
ஒரு வீசை குறைந்தது
முதல் சமரில்
நீ
காயம் பட்ட போது...!

என் வாழ்கையில்
நான் முதன் முதலில்
உபவாசம் அனுஷ்டித்தது
நீ
உன் பசி மறந்த போது!

என் மனதுக்குள்
நீ
விதைத்த விதை
நீயாகவே
வேரூன்றி...
..வெட்டி வீழ்த்த
இனி
நீ வந்தாலும் இயலாது..!


மாவீரன் பதில்

கடும் குளிரில்
இந்தக் காவலரண்களில்...
நான்..!
கண்மணியே...!
கனரகம் சுமந்து
இந்தக் கைகள்
களைக்கவில்லையடி..!
உன் கனவுகள் சுமந்த
ந்ன் இதயம்
கனக்கிறதடி!
விடியல்கள் எண்ணுகின்றேன்,
வீணர்களைக் காவு வாங்கி;
செய்திகள் அனுப்புகின்றேன்,
தூதுகள் வந்ததா உன்னிடம்...?

கணங்களில்
உன் காதல் கூட
என்னைக் கோழையாக்குகிறது!
ஆனால்..
ஈழமாதவின் கண்ணீர்
இங்கே திரும்பவும்
என்னை இரும்பாக்குகிறது!
சுவாசத்தைப் பங்கிட்டேன்
தேசத்துக்கும் .., உனக்குமாய்...
எனக்கென்று
சேதாரமாய் எதுவுமில்லை..
இந்தக்
குப்பியைத் தவிர...!

(வேறு)

வெற்று வேட்டுக்கள் - எங்கள் வேலிகளில்
போட்டன நூறு ஓட்டைகள்
சுட்டுப் பொசுங்கிய பிண நாற்றங்கள்
வலி குத்தி முடக்கிய உயிர்க் கூடுகள்
பட்டுத் தெறித்துச் சிதறிய செல் துண்டுகள்
வெட்டிப் போட்ட உடல் முண்டங்கள்
கற்றுத் தந்தது வெறும் பாடமல்ல
விற்று விலை பேசவும் யாம் வீணரல்ல
சற்றுப் பொறுத்திரு சந்திரமதி- நாம்
சந்திக்கும் போதிங்கு மாறியிருக்கும் ஈழவிதி!
எழுதப்பட்ட திகதி: மார்கழி , 5, 2001.

3 comments:

செல்வா said...

நல்ல கவிதை.

என்னை ஈர்த்த வரிகள்:

(1) //உன்னை
அணைப்பவை எவற்றையும்
வெறுக்கிறேன்,
உன் மரணம் உட்பட...
உன்னோடெனை
இணைக்கும் எதனையும்
நேசிக்கிறேன்
உன்னோடான
என் மரணம் உட்பட...!//

(2)//என் மனதுக்குள்
நீ
விதைத்த விதை
நீயாகவே
வேரூன்றி...
..வெட்டி வீழ்த்த
இனி
நீ வந்தாலும் இயலாது..! //

மேலும் நிறைய எழுதுங்கள்!

அன்புடன் செல்வா

ஸ்வாதி said...

நன்றி திரு செல்வா அவர்களே!
எழுத முயற்சித்துக் கொண்டு தான் இருக்கின்றேன். :) உங்கள் ஊக்கத்திற்கு எனது நன்றிகள்...பல.

Ashwinji said...

//உன்னை
அணைப்பவை எவற்றையும்
வெறுக்கிறேன்,
உன் மரணம் உட்பட...
உன்னோடெனை
இணைக்கும் எதனையும்
நேசிக்கிறேன்
உன்னோடான
என் மரணம் உட்பட...!//

நயம் பட உரைத்த கவிதை
இதயத்தை தொட்ட கவிதை.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com